தருமபுரி எம்.பி தொகுதியில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?

தருமபுரி எம்.பி தொகுதியில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?

தருமபுரி எம்.பி தொகுதியில் யார் போட்டி?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் எந்தெந்தக் கட்சி போட்டியிடப்போகிறது என்ற தகவலும், யாருக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய களநிலவர ஆய்வுகளும் வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான செய்தித்தொகுப்பை பார்ப்போம்.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வறட்சியால் பாதித்த மாவட்டமாக தருமபுரி உள்ளது. ஒகேனக்கல் வழியாக காவிரியாறு பாய்ந்தாலும், இம்மாவட்த்தில் விவசாயத் தொழில் செழிப்பாக இல்லை என்ற கவலை தர்மபுரி விவசாயிகளிடம் இருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதியான மேட்டூரும் உள்ளடங்கிய மக்களவைத் தொகுதியாக தருமபுரி திகழ்கிறது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த வன்னியர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக பறையர் சமூகமும், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகமும் கணிசமாக உள்ளன. இருப்பினும், துளுவ,

வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அருந்ததியர், கன்னடர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் உள்ளனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றது. இதுதவிர, பாமக 4 முறை வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதிக்கு பாமக கோட்டை என்ற பெயரும் உள்ளது. கடந்த

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவின் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தருமபுரி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் டாக்டர் செந்தில்குமார், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மக்கள் நீதிமய்யம் சார்பில் ராஜசேகர், நாம் தமிழர்கட்சி சார்பில் ருக்மணி தேவி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். மொத்தம் 15 வேட்பாளர்கள் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

திமுக இளைஞரணி கோட்டாவில் தருமபுரி தொகுதியில் வெற்றிபெற்ற டாக்டர் செந்தில்குமாருக்கு சமூக சேவகர் என்ற நல்ல பெயர் உள்ளது. முறைகேடுகள், சொத்துக்குவிப்பு, கமிஷன், கரப்ஷன் என எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்ற பெயர் டாக்டர் செந்தில் குமாருக்கு உள்ளது. அண்மையில், இந்தியாவில் தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தருமபுரி எம்.பி. செந்தில் குமார் நான்காவது இடம் பெற்றுள்ளார். கேட்வே பொலிட்டிக்கல் ஸ்டேட்டஸ் என்ற தனியார் அமைப்பு ஆண்டுதோறும் லோக்சபா இணையதள தரவுகளின் அடிப்படையில் சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில்,

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் நாடாளுமன்ற வருகையில் 100 சதவீதம் வருகையும், தேசிய அளவில் 79 சதவீதமும், மாநில அளவில் 74 சதவீதமும் பெற்றுள்ளார். 266 விவாதங்களில் பங்கு பெற்று உரையாற்றியுள்ளார். மாநில அளவில் 46.9 சதவீதமும் தேசிய அளவில் 41.2 சதவீதமும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அரூர் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தை இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த சமீபத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதி பெற்று தந்துள்ளார், இதற்காக, மத்திய அரசு 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது போன்று பல்வேறு நலப்பணிகள் செய்து வரும் டாக்டர் செந்தில் குமார், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 8 அணைக்கட்டுகள் உள்ள போதிலும், கோடைக்கு முன்பாகவே பெரும்பகுதி வறண்டுவிடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றார். புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, காவிரி உபரிநீரை நீர்நிலைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளூரில் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் சிப்காட் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட டாக்டர் செந்தில்குமாருக்கு ஆசை இருந்தாலும், அதற்கான பொருளாதார வசதி இல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதே நேரத்தில் திமுக வேட்பாளராக இங்கு போட்டியிட முன்னாள் அமைச்சரும், அமமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்து மாவட்ட செயலாளர் பதவியை பெற்றுள்ள பழனியப்பனும் முயற்சி செய்து வருகிறார். இவர் அமமுகவில் இருந்து திமுகவில் சேர முக்கிய காரணமாக இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது வழக்குகள், சிறைவாசம் என சிக்கி இருப்பதால் பழனியப்பன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக - பாமக கூட்டணி உருவானால் இங்கு பாமக மீண்டும் போட்டியிடும் என்றும், பாமக வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி அல்லது டாக்டர் செந்தில் போட்டியிட வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பேசப்படுகிறது. பாஜக தனித்துப்போட்டியிட்டால் இங்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரை தற்போதைய சூழலில் உதயசூரியனுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதிமுக பாமக கூட்டணி உருவானால், திமுகவுக்கு வெற்றி எளிதில் கிடைக்காது என்றும் களநிலவரங்கள் கூறுகின்றன.

Tags

Next Story