ஷாட்ஸ்

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை..!!

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒசூர் அருகே லாரி மோதி விபத்து - குழந்தை உள்பட 2 பேர் பலி !

ஒசூர் அருகே பி.செட்டிப்பள்ளி பகுதியில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்த விபத்தில் 18 மாத குழந்தை, பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ரமணியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை !!

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இன்று  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் !!

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய்க்கு உயர்ந்து 7 ஆயிரத்து 145 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101க்கு விற்கப்படுகிறது.

அதானி குழும நிறுவன பங்குகள் விலை கடும் சரிவு!!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 29 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்தது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது. அதானி போர்ட் பங்கு விலையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகிறது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 11 சதவீதம் சரிவு ஆன நிலையில் அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதம் சரிவடைந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை 16 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 28 சதவீதம் சரிந்துள்ளது.

மோசமான வானிலை: விமானம் அவசர தரையிறக்கம்!!

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. சென்னை – தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எ.வ.வேலு.

நாகை மீனவர்கள் 3 ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை!!

நாகை மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் 3ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் 3,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம், காற்று காரணமாக 25 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவு!!

ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாம்பனில் 125 ஆண்டுகளுக்கு பிறகு 28 செ.மீ மழை பதிவு; முன்னதாக டிசம்பர் 2, 1955ல் பதிவான 22 செ.மீ. மழையே அதிகமாக பதிவானது. தங்கச்சிமடத்தில் 32 செ.மீ., பாம்பனில் 23 செ.மீ மழை பதிவு; மண்டபத்தில் 26 செ.மீ. மழை கொட்டியுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்!!

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. சிறப்பு குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு போலீஸ் ஆட்சேபனை தெரிவிக்காததால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கியது. காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கியது அந்நாட்டு நீதிமன்றம்

 பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அரசின் பரிசுப் பொருளை விற்பனை செய்த வழக்கில், இம்ரான் கைது செய்யப்பட்டார்.

தடையில்லா சான்று தந்தவர்களுக்கு நன்றி: நயன்தாரா

தனது திருமணம் குறித்த ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். உங்களை அணுகிய போது எந்த தயக்கமும் இன்றி தடையில்லா சான்று வழங்கியதை நினைவில் வைத்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். நானும் ரவுடிதான் படக்காட்சியை பயன்படுத்த தனுஷ் தடையில்லா சான்றிதழ் தரவில்லை. தனுஷை காட்டமாக விமர்சித்து நடிகை நயன்தாரா அறிக்கையும் வெளியிட்டிருந்தார். நயன்தாரா நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் பட்டியலில் தனுஷ் பெயர் இடம்பெறவில்லைNayanthara: Beyond the Fairy Tale எனும் நயன்தாராவின் ஆவணப்படம் நவ.18ல் வெளியானது

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

மயிலாடுதுறையில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி, மும்பை, கொச்சி, அந்தமான் உள்ளிட்ட 20 விமானங்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு கட்டணத்தை திருப்பித் தர ஏற்பாடு செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடக்கம் - கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளியாகும் நிலையில், அதன் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதால் இக்கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.


வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் சென்றது என்பது தவறானது - பாஜக  முரளிதரன்

நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது குறித்த ஆளும் இடதுசாரி கூட்டணியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் முரளிதரன் பதிலளித்தார். அதில்; வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் செல்லப்பட்டதாக சொல்வது தவறானது. 3 வார்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. உணர்வுப் பூர்வமாக பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு -  எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு தடை கோரியும் மான நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல்  செய்த படகுகளை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை கடற்படையினர் பயன்படுத்தி கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.