ஷாட்ஸ்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

சங்கம்விடுதி மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சீர்காழி அருகே தெரு நாய் கடித்துக் குதறி 3 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!!

சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு பகுதியில் 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது. தெரு நாய் கடித்து படுகாயமடைந்த 3 வயது சிறுவன் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்!!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி போலீசார் தாக்கல் செய்த மனு விசாரணையில் திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம்: அண்ணாமலை

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை திமுக அரசு முடக்கியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தை மூடுவதாக வெளியிட்ட அரசாணை 66-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் மீனவ சமுதாய மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பருவமழைக்கு முன் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தென்மேற்குப் பருவமழைக்கு முன்பு நீர்நிலைகளைத் தூர்வார முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 10 ஆயிரம் தடுப்பணைகளைக் கட்டுவோம் எனக் கூறியதை செய்யாத பத்தாம்பசலியாக திமுக அரசு உள்ளது என்றும் பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை உயிர்நீராக ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உதகை மலர் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் குறைப்பு!!

உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.125ஆக தோட்டக்கலைத்துறை குறைத்துள்ளது.   

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் போக்சோ கொண்டுவந்த நோக்கத்திற்கு எதிரான திசையில் வழக்குகள் செல்வது கவலையளிக்கிறது என்றும் போக்சோ வழக்கில் குற்றவாளிகள் அதிகம் விடுதலை செய்யப்படுவதைக் களைய நடவடிக்கை தேவை; குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் தண்டிக்கப்பட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கம்!!

சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை 19 ஆண்டுகளுக்கு பின்னர் மே 2ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடைகிறது. இந்த மின்சார ரயிலில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்ல கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மதுரைக்கிளை பாராட்டு!!

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு!!

கனமழை எச்சரிக்கையை அடுத்து கனமழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. மே 15-ம் தேதி முதல் மே 19 வரை 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை!!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், விருதுநகர் சாத்தூர், மேட்டமலை, இருக்கன்குடி, அண்ணாநகர், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. மேலும் அரியலூர், கன்னியாகுமரி, : திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம், கள்ளக்குறிச்சி, சந்தைபேட்டை, ஆவியூர், சைலோம், குன்னத்தூர், அரியூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்து விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்!!

மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்றபோது பத்தனம்திட்டா துலா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. வாகனம் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் பணியாற்றும் கேங் மேன்களுக்கு எலக்ட்ரிக் டிடெக்டர் வழங்க முடிவு: மின்சார வாரியம்

மின்வாரியத்தில் பணியாற்றும் கேங் மேன்களுக்கு எலக்ட்ரிக் டிடெக்டர் வழங்க முடிவு செய்துள்ளனர். மின்கம்பங்களில் ஏறி பழுதை சரிசெய்பவர்களுக்கு பாதுகாப்புக் கருவி வழங்கப்பட உள்ளது. கேங்மேன்கள் அவ்வப்போது மின்சாரம் தாக்கி உயிர் இழப்பது தொடர் கதையாகி வருகிறது. முதற்கட்டமாக சேலத்தில் 450 டிடெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. டிடெக்டர்களை பயன்படுத்தி மின்கம்பத்தில் ஏறும் பொழுது மின்சாரம் இருந்தால் அலாரம் அடிக்கும் என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு!!

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் குறைந்து 22,201 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கை

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) உடன் இணைந்து, நாடு முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்திய குடிமக்களுக்கு 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் இந்த டீ, காபி பானங்களால் தடைபடக்கூடும் எனவும் இதனால் அனீமியா போன்ற உடல்நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் அதிக காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு இந்தியாவில் மே 18-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: வானிலை மையம் தகவல்

வடமேற்கு இந்தியாவில் மே 18-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், அரியானாவில் அடுத்த 5 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும்.

மோடியை எதிர்த்து போட்டியிட வாரணாசி செல்ல விடாமல் விவசாயிகளை தடுத்துவிட்டனர்: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்த விவசாயிகளை மனுதாக்கல் செய்ய முடியாதபடி தடுத்து விட்டதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டி உள்ளார்.

காங். வேட்பாளர் வாபஸ்; இந்தூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு 7.5சதவீதம் குறைவு

மத்தியப்பிரதேசத்தில் இந்தூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு விகிதம் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் மக்களவை தொகுதி மற்றும் இதர 7 தொகுதிகளுக்கு நான்காவது மற்றும் இறுதி கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்‌ஷய் காந்தி பாம் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று பாஜவில் இணைந்தார்.