கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளான வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்
திருப்பூர் சிக்கனா அரசு கலை அறிவியல் கல்லூரியில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் - அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனா்
திருப்பூர் சிக்கனா அரசு கலை அறிவியல் கல்லூரியில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் - அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனா்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கான வாகன விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது. 2023ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதிவரை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு ஊர்களில் நடைபெறுகிறது. இதனை பள்ளி கல்லூரி மாணாக்கர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் ஐந்து வாகனங்கள் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்கப்பட்டுள்ளன. அதில் சென்னை,திருச்சி, மதுரை ஆகிய மண்டலங்களுக்கு தலா ஒரு வாகனமும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கு இரண்டு வாகனங்களும் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கோயம்புத்தூரிலிருந்து கிளம்பிய பிரச்சார வாகனம் இன்று காலை திருப்பூர் வந்தடைந்தது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இருந்த வாகனத்தில் போட்டிகள் நடைபெறும் இடங்கள், நடத்தப்படும் போட்டிகள் உள்ளிட்ட விபரங்களுடன், தமிழ்ச்சுடர் மற்றும் வீர மங்கை சிலைகளுடன் பெரிய தொலைக்காட்சித் திரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான படக்காட்சிகள், பாரதப்பிரதமர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், மாநில முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்களின் பேட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. வாகனப் பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பு சிலம்பம், சுருள் வாள், மான்கொம்பு, சக்கரம் சுற்றுதல் போன்ற பாரம்பரிய தற்காப்பு விளையாட்டுகளை மாணவர்கள் செய்து காட்டினர். வாகன விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தமிழ்நாடு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு, கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு குமார் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், நான்காம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, நஞ்சப்பா மாணவர்கள் பள்ளி வளாகங்களில் நிறுத்தப்பட்டு மாணாக்கர்களால் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரை நிறைவு செய்துவிட்டு இன்று மாலை கரூர் செல்லவுள்ளது.
Next Story