தேசிய கபடிபோட்டி : தமிழக பெண்கள் அணிக்கு 12 பேர் தேர்வு
தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் மற்றும் கபடி கழக நிர்வாகிகள்
தேசிய கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழகபெண்கள் அணிக்கான தேர்வு திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் 12 வீராங்கனைகள் தேர்வுசெய்யப்பட்டனர். பஞ்சாப்பில் வருகிற 10ந் தேதி முதல் 13ந் தேதி வரை தேசிய அளவிலான கபடி போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழக பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்றது. தேர்வில் 38 மாவட்டங்களில் இருந்து 456 பேர் பங்கேற்றனர். இதிலிருந்து 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும், திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகமும் இணைந்து பயிற்சி முகாமை கடந்த 24ந் தேதி முதல் நடத்தியது. இந்த பயிற்சியில் பங்கேற்ற வீராங்கனைகளில் இருந்து சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய கே.தீபா, ஆர்.சவுந்தர்யா, வி.வைதேகி, ஸ்ரீசிநேகா, கத்திஜாபீவி, பி.தஷ்ணி, எஸ். லோகேஸ்வரி, என்.பூமிகா, ஆர்.சங்கரி, எஸ்.அட்சயா, ரிஷிகா வெங்கடேஷ், ஏ.ராஜகுமாரி ஆகிய 12 வீராங்கனைகள் தமிழக பெண்கள் அணிக்காக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்வு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில செயலாளர் ஏ.ஷபியுல்லா, மாவட்ட செயலாளர் ஆர். ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் கோபாலன், முன்னாள் கபடி வீரர் சாமியப்பன், மேலாளர் சண்முகம், பயிற்சியாளர் கிருஷ்ணவேணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு வருகிற 6ந் தேதி வரை உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு அவர்கள் தேசிய கபடி போட்டியில் கலந்துகொள்ள பஞ்சாப்புக்கு புறப்பட்டு செல்கின்றனர்.