அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி - முன்னேற்பாடு பணிகள் கூட்டம்

அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி - முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி மற்றும் அருள்மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, நாமக்கல் நகராட்சி, அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் எதிர்வரும் 23.12.2023 அன்று வைகுந்த ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சியும், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் எதிர்வரும் 11.01.2024 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் நடைபெறவுள்ளன. வைகுந்த ஏகாதசி அன்று வழக்கமாக 23.12.2023 அன்று அதிகாலை 03.00 மணிக்கு முன்னரே பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருவார்கள் என்பதால் அன்றைய தினம் (23.12.2023) அன்று அதிகாலை 03.00 மணிக்கு முன்னரே பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும். விழா நாளன்று இரவு 09.00 மணியளவில் நடை சாத்தப்படும் என்பதால் அதுவரை காவல்துறை பாதுகாப்பு வழங்கிட வேண்டும். திருவிழாவின்போது பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் இவ்வாண்டு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்திருக்கோயில் நிர்வாகம் ஆங்காங்கே அறிவிப்பு பலவகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவேண்டும். விழா நாளன்றும் திருக்கோயில் சன்னதிகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நாமக்கல் நகராட்சி ஆவண செய்திட வேண்டும். விழா நாளுக்கு முன்பும், விழா நாளன்றும் திருக்கோயில் வெளிப்புறங்கள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். பொது மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி செய்திட வேண்டும். பக்தர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை, திருக்கோயில்களின் முன் 108 ஆன்புலன்ஸ் சேவை மற்றும் முதலுதவி வசதிகள் போதிய அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தயார் நிலையில் தீயணைப்பு வாகனத்தினை நிறுத்தி வைத்து தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மேற்கண்ட துறைகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் / செயல் அலுவலர் இரா.இளையராஜா, அரங்காவலா்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story