சோமவாரவரதலங்களின் விவரங்கள்
சோமவாரம்
சோமவார விரதங்களின் விவரங்கள்
சோமவாரம் அனைத்திற்கும் ஆதிமூலமானவர் சிவபெருமான். சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சோமவார விரதத்தை கடைபிடித்து தான், சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம்பெற்றான் என்றும் புராணங்கள் கூறுகின்றன. சோமன் என்றால் சந்திரன் என்றும் பொருள்படும். சோமவார விரதத்தை சந்திர பகவானே முதன் முதலில் அனுஷ்டித்ததாகவும், அதனாலேயே இதற்கு சோமவார விரதம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சோமவார விரதம்: 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது சோமவார விரதம் எனப்படுகிறது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் சோமவார விரதம் மிக சிறப்புடையது. இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் மட்டுமே கடைபிடிக்கின்றனர். ஆனால் இவ்விரதத்தை எல்லா திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கலாம். சோமவார விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது? சோமவார விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேத்தியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். அன்றைய தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் சொல்லி வர வேண்டும். பின்பு மாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம். இதுபோல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் கடைபிடித்து சிவபெருமானை வணங்குபவருக்கு சிவனின் ஆசி கிடைத்து, நினைத்தது நிறைவேறும். கணவன், மனைவி ஒன்று சேர.. சோமன் என்பதற்கு பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்ற பொருளும் உண்டு. எனவே, சோமவார விரதத்தை கடைபிடித்தால் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்க இவ்விரதம் மிகச்சிறந்தது. திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். விரதத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்: தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். மனக்குழப்பத்தால் துன்பப்படுபவர்கள் சோமவார விரதத்தை கடைபிடித்தால் மனத்தெளிவு உண்டாகும்.. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். காரியத் தடைகள் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கடன், வறுமை போன்றவை நீங்கி செல்வம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
Next Story