ராகு கேது பெயர்ச்சி பரிகார சிறப்பு வழிபாடுகள்

ராகு கேது பெயர்ச்சி பரிகார சிறப்பு வழிபாடுகள்

ராகு கேது பெயர்ச்சி

ஓசூர் ஸ்ரீபிரத்தியேங்கிரா தேவி கோயிலில் ராகு கேது பெயர்ச்சி பரிகார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரத்தியேங்கிரா தேவி கோயிலில் ராகு கேது பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியானது இம்மாதம் 8 ஆம் தேதி அன்று நடைபெற்றது. திருக்கணித வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இன்று அதன் முழுமை நிறைவு பெற்றதை அடுத்து, ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்து பிரவேசித்தனர். ஒசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரத்தியேங்கிரா தேவி கோயிலில் ராகு பகவான் மற்றும் கேது பகவான் மூலவராக ஒரே சந்நிதியில் காட்சி தந்து அருள் பாலித்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும். இதனையொட்டி இந்த திருக்கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை செய்து வழிபட்டனர். முன்னதாக மூலவர் ராகு கேது பகவானுக்கு பால், தயிர்,வெண்ணை, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவித்து மலர் அலங்காரத்தில் காட்சி தந்த மூலவர்களுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்று வழிபட்ட அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தவாரி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story