இனி இந்த ஊருக்கும் இ-பாஸ் கட்டாயம்!!

kodaikanal e-pass
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், "ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள் ஆகும். அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். தற்போது இதில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு மட்டும் இ-பாஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து விரைவில் வால்பாறை பகுதிக்கான இ-பாஸ் ஆப்ஷனும் அதில் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே நவம்பர் 1ஆம் தேதிக்கு பின் கோவையில் உள்ள வால்பாறைக்கு பயணம் செய்ய இருந்தால் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
இ-பாஸ் எடுப்பது எப்படி?
தற்போது ஊட்டி, கொடைக்கானலுக்கு தனி வாகனத்தில் செல்பவர்கள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் ஆகும். அதே நேரத்தில், இ-பாஸ் எடுக்கும் வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு எளிமையாகவே வகுத்துள்ளது. TN ePass என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளமும் (https://www.tnepass.tn.gov.in) தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில், பயணம் செய்பவரின் இருப்பிடம், வாகன விவரங்கள், பயணம் செய்யும் தேதிகள் போன்ற படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை நிரப்ப வேண்டும். மேலும், ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC), காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், உங்களின் விண்ணப்பப் படிவும் சரிபார்க்கப்பட்டதும், உங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். நீங்கல் கொடுத்த மின்னஞ்சலிலோ அல்லது கொடுத்த மொபைல் நம்பருக்கு SMS மூலமாகவோ இ-பாஸ் வந்துவிடும்.
