குவியும் தொண்டர்கள்.. ! மதுரையில் இன்று கூடுகிறது தவெகவின் 2வது மாநில மாநாடு!!

tvk manadu
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னுமிடத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று மாநாடு நடைபெறுகிறது. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ எனக்குறிப்பிட்டு மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு மேடை மற்றும் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், 200க்கும் மேற்பட்ட மின் விளக்குகள், பந்தல், அலங்கார வளைவுகள், 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக 5 லட்சம் லிட்டர் குடிநீர் 1 லிட்டர் என்கிற அளவில் பாட்டில்களாக தயார் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் நேற்று பிற்பகல் மதுரை சென்றடைந்த நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று மதியம் காரில் புறப்பட்ட அவர் 7 மணியளவில் மதுரையை சென்றடைந்தார். பின்னர் மாநாட்டு பகுதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார். பெண்களும் அதிகளவில் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் 50 பெண் பவுன்சர்கள் உள்பட 55 பவுன்சர்கள் மற்றும் 2 ஆயிரம் தனியார் நிறுவன பாதுகாவலர்களும் மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் மாநாடு திடலில் குவிய தொடங்கி உள்ளனர். பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் மாநாட்டு நடைபெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பாரப்பத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.
