கடலுக்கு செல்ல ராமேசுவரம் மீனவர்களுக்கு நீடிக்கும் தடை!!

கடலுக்கு செல்ல ராமேசுவரம் மீனவர்களுக்கு நீடிக்கும் தடை!!

fishermen

ராமேசுவரம் பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு குறிப்பாக 7 மாவட்டங்களில் இன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடந்த 4 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின. இதில் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. பாம்பன் தெற்குவாடி, லைட்ஹவுஸ் தெரு கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசை வீடுகள், அலைகளால் மோசமாக சேதமாகியது. வங்கக் கடலில் உருவான புயலால் நேற்று மதியம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 24-ந்தேதி முதல் ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர். அந்தத் தடை இன்றுவரை நீடித்து வருகிறது. இன்று புயல் கரையை கடக்கும் பட்சத்தில் நாளை மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு பகுதியில் மீனவர்கள் கடற்கரை செல்ல அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேசுவரம், பாம்பன் மண்டபம் பகுதியில் சுமார் 1,600 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. பெஞ்சல் புயல் எதிரொலியாக கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story