தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல்: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம்

தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல்: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம்
X

high court of madras

தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ததாக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரியில், தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். ஆனால், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லூரிகள் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூறி 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. அந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ள நிலையில், அரசு தேவையில்லாமல் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எதிர்மனுதாரர் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கும், மீதத்தொகையை சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் 15 நாட்களில் செலுத்த வேண்டும். தனி தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும். அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து வருகிற 20-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags

Next Story