ரூ.50,000 மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன் - கலைஞர் கைவினை திட்ட அம்சங்கள்....

ரூ.50,000 மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன் - கலைஞர் கைவினை திட்ட அம்சங்கள்....

தலைமை செயலகம் 

சென்னை: ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கைவினை கலைஞர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் நோக்கிலும் கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். 25 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் உண்டு. பயனாளிகள் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மரவேலைகள், படகு தயாரித்தல், உலோக வேலை, மண்பாண்டம், கூரை முடைதல், கட்டிட வேலை, கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், பொம்மை தயாரிப்பு, மலர் வேலை, தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல், துணி தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி கலைவேலைபாடுகள், பாசிமணி வேலைப்பாடு, பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல் உள்பட 25 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் தலைமையிலான குழு சரிபார்த்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.


Tags

Next Story