திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சேகர் பாபு
Sekarbabu
திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டி திருவண்ணமலை வரும் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது. மலையில் மகாதீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பார். திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.