தலைக்குந்தாவில் புலி நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
தமிழக அளவில் 67 சதவீத வனப்பகுதியை கொண்டதாக நீலகிரி மாவட்டம் உள்ளது. யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுக்கு இந்த வனம் வாழ்விடமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைவதால் மனித விலங்கு எதிர்கொளள் அதிகரித்துள்ளது. ஊட்டியில் இருந்து மைசூர் செல்லக் கூடிய வழியில் பைன் ஃபாரஸ்ட் பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் தலைகுந்த அடுத்த பைன்பாரஸ்ட் பகுதியிலிருந்து சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு செல்ல புலி வந்து கொண்டிருந்தது. அப்போது புலியை பார்த்த சுற்றுலா பயணிகள் அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். மனிதர்கள் நடமாட்டத்தை உணர்ந்த புலி, இதனால் சாலையைக் கடக்காமல் பைன் பாரஸ்ட் பகுதிக்குள் மீண்டும் ஓடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில், புலி நடமாட்டம் இருப்பதால் மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் பைன் ஃபாரஸ்டுக்கு விரைந்தனர்.
புலி நடமாடிய பகுதிகளில் கால் தடம் மற்றும் ரோமங்களை ஆய்வு செய்து புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் பின்னர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தலத்தை தற்காலிகமாக மூட வனத்துறையினர் உத்தரவிட்டனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் பைன் ஃபாரஸ்ட் பகுதியில் சுற்றிப் பார்க்க வந்திருந்த நிலையில் புலி நடமாட்டம் காரணமாக அனைத்து சுற்றுலா பயணிகளையும் அவசர அவசரமாக வனத்துறையினர் வெளியேற்றனர். இதனால் பைன் ஃபாரஸ்ட் பகுதிக்கு சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேறினர். தொடர்ந்து புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.