சிற்பக்கலைகளின் கூடம் தாராசுரம் !

சிற்பக்கலைகளின் கூடம் தாராசுரம் !

தாராசுரம்

கும்பகோணத்திற்கு 5- கி.மீ .தொலைவில் தாராசுரம் அமைந்துள்ளது. இங்கு இரண்டாம் ராஜராஜன் காலத்திய கோயில் அழகுற கட்டப்பட்டுள்ளது. கோயிலில் இசை படிக்கட்டுகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் முன் மண்டபத் தேரை யானைகள் இழுத்து செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. தூணில் பல்லவர், சோழர் கால தூண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓர் அங்குல பிள்ளையார், நந்தி முதலியன காணப்படுகிறன.கற்களை சிற்பமாக்கிய பின் வழவழப்பாக மெருகேற்றும் பாணி பிற்கால சோழர் சிற்பங்களில் இருப்பதை இங்குள்ள கண்ணப்ப நாயனார் சிலையில் பார்க்கலாம். இங்குள்ள சரப மூர்த்தி சிலை, லிங்கோத்பர், தட்சிணாமூர்த்தி போன்றவை காணத்தக்கவை. வலப்புறம், இடப்புறம் வாயிற் கதவுக்கு அருகில் பெரிய புராண காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இராமயணக் காட்சிகளும் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான கல் ஜன்னல்களை காணலாம். அதன் கீழ்புறம் நாலு உடல் ஒரு தலை உள்ள பெண்ணின் நடனம், கர்ப்பிணிப் பெண்ணின் நடை முதலிய சிற்பங்கள் காணத்தக்கன. வில்வ மரத்தடியின் கீழ் யானை- காளை சிலை உள்ளன. இதில் தலையை மறைத்தால் ஒன்று மற்றதாகும் விந்தையை காணலாம். அதற்கு மேலுள்ள படிக்கட்டில் ஏறிப்பார்த்தால் 63 நாயன்மார்களின் சிலைகளும் சுவரில் படைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு அக்கால தமிழ் எழுத்துக்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கை வரலாறும் கீழே வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களை ஒரே நேர்கோட்டில் பார்க்கும் போது பரவசம் ஏற்படுவது இயல்பு. இதனால் தானோ தாராசுரத்தை 'சிற்பக்கலைகளின் கூடம்' என்று அழைக்கின்றனர். இது ஒரு சுற்றுலா தலமாகும்.

Tags

Next Story