கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊட்டியில் குறைந்து காணப்படும் சுற்றுலா பயணிகள் !!
நீலகிரி
சுற்றுலா நகரமான ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் சமயங்களில் கூட்டம் அலைமோதும். சீசன் இல்லாத சமயங்களில் வார இறுதி நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்படும்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் அண்டை மாநிலங்களாக விளங்க கூடிய கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர்.
இந்நிலையில் மழை காரணமாக கடந்த மாதம் 30ம் தேதியன்று கேரளாவின் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 400க்கும் மேற்பட்டோர் பாறைகள் மற்றும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். இக்கொடூர சம்பவம் காரணமாக கேரள மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த 11 நாட்களாக கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. இரண்டாவது வாரமாக கடந்த இரு நாட்களாக அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நகருக்கு வெளியில் அமைந்துள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.