தஞ்சையின் சிறப்புகள் !
தஞ்சையின் சிறப்புகள்
காவிரியால் வளம் கொழிப்பதால் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்னும் அளவிற்கு புகழ்பெற்றது இந்த மாவட்டம்.தன்னிடம் வந்து தஞ்சம் அடைந்த வேற்று நாட்டு மக்களுக்கு உணவும் உறைவிடவும் பாதுகாப்பும் தந்து தஞ்சம் கொடுத்த காரணத்தினால் தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுகிறது.மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழவள நாடு என்றும் 'சோழநாடு சோறுடைத்து' என்றும் குபேரனின் அழகாபுரி என்றும் பலவாறாக புகழப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை ராஜராஜ சோழன் கட்டினான். புவி அதிர்வுகளாலோ, இடி மின்னல்களாலோ பாதிப்பு ஏற்படாத அளவிற்கு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான் பெருவுடையார் கோயில் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கிறது .இக்கோயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்ட கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. கோயிலின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது அங்கு வேலை செய்யும் சிற்பிகளுக்கு தினமும் தயிர் ,மோர் வழங்கி வந்த அழகி என்னும் ஓரு இடையர் குல ஏழை மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80-டன் எடை கொண்ட கல்லில் "அழகி" என்று பெயரை பொறித்து அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம்பெற செய்தார் ராஜராஜ சோழன். அந்த கல் "இடைச்சி கல்" என்று இன்றும் அழைக்கப்படுகிறது .அந்த கல்லின் நிழல் தான் இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது. கல்லணை,இ ராஜராஜன் மணிமண்டபம், மனோரா கோபுரம் ,ஷ்வார்ட்ஸ்தேவாலயம், சிவகங்கை பூங்கா போன்ற ஏராளமான சுற்றுலா இடங்களை கொண்டது. சுவாமிமலை சிற்பம், திருப்புவனம் பட்டு, தஞ்சாவூர் வீணை தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வெற்றிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு போன்றவை தஞ்சாவூர் மாவட்டத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.