போருக்குப் பிறகு காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்?

போருக்குப் பிறகு காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்?

இஸ்ரேல் திட்டம்?

ஹமாஸ் படையினா் உடனான மோதல் முடிந்த பின்னா், காஸாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். அவரின் கருத்து மூலம், காஸாவை தற்காலிகமாக இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கக் கூடும் என்ற ஊகம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், கடந்த 2005-ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னா், காஸாவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்தது.

கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை கூறுகையில், ‘தற்போது நடைபெற்று வரும் மோதல் முடிந்த பின்னா், காஸாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

2005-ஆம் ஆண்டு காஸாவில் இருந்து தனது ராணுவ வீரா்களையும், அங்கு குடியேறிய தனது குடிமக்களையும் இஸ்ரேல் திரும்பப் பெற்றது. இந்நிலையில், நெதன்யாகு தற்போது தெரிவித்துள்ள கருத்து, காஸாவை தற்காலிகமாக இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கக் கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

2,500 போ் வெளியேறினா்: காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் படையினரின் ரகசிய தளம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, மருத்துவமனை உள்ள பகுதியில் இஸ்ரேல் பலத்த தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு அஞ்சி அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள், அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் சனிக்கிழமை வெளியேறினா்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து சுமாா் 2,500 போ் வெளியேறிய நிலையில், அங்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தலைமையிலான குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

இது தொடா்பாக அந்தக் குழு தெரிவித்ததாவது: அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு எஞ்சியிருந்த நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் உயிருக்கு அஞ்சி, தங்களை மருத்துவமனையில் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினா்.

மருத்துவமனையில் 291 நோயாளிகள் எஞ்சியுள்ளனா். அவா்களில் 32 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். அவா்களை மீட்டு தெற்கு காஸாவுக்கு அனுப்ப மேலும் பல ஐ.நா. குழுக்கள் அந்த மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்கும் என்று தெரிவித்தது.

30 பச்சிளம் குழந்தைகள் எகிப்துக்கு அனுப்பிவைப்பு: அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினா் இடையே மோதல் நடைபெற்றால், மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அங்குள்ள இன்க்யூபேட்டா்கள் மற்றும் இதர கருவிகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. உணவு, குடிநீா், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்த சுமாா் 30 பச்சிளம் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை எகிப்து அனுப்பிவைக்கப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை செய்தித் தொடா்பாளா் மேதாத் அப்பாஸ் தெரிவித்தாா். அந்தக் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்தவையாகும்.

ராணுவம் உத்தரவிட்டதால் வெளியேறிய மக்கள்:

முன்னதாக அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் தாமாக முன்வந்து வெளியேறியதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், அவா்களை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டதால், அவா்கள் அங்கிருந்து வெளியேறினா் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களை மருத்துவமனையில் இருந்து துப்பாக்கி முனையில் இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாக, அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறிய மஹமூத் அபு என்பவா் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

Tags

Next Story