அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி முடிவு வெளியீடு; 7 முக்கிய மாகாணத்திலும் டிரம்ப் அமோக வெற்றி!!

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி முடிவு வெளியீடு; 7 முக்கிய மாகாணத்திலும் டிரம்ப் அமோக வெற்றி!!

Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடிய 7 முக்கிய மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடிய 7 முக்கிய மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. இதில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசை, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வென்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றிக்கு தேவையான 270 எலக்டோரல் ஓட்டுக்களை டிரம்ப் வென்றதன் மூலம் அவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், சில மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வந்தது. தற்போது அனைத்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்து இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மொத்தம் 538 எலக்டோரல் ஓட்டுகளில் டிரம்ப் 312 ஓட்டுக்களை வென்று அசத்தி உள்ளார். கமலா ஹாரிஸ் 226 ஓட்டுக்களை பெற்றுள்ளார். குறிப்பாக, அதிபர் தேர்தலில் அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனதியா, வட கரோலினா, ஜார்ஜியா ஆகிய 7 மாகாணங்களே வெற்றியாளரை தீர்மானிக்கும். இதில் கடைசியாக அரிசோனா மாகாணத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அரிசோனா மாகாணத்தையும் கைப்பற்றிய டிரம்ப் 7 முக்கிய மாகாணத்திலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 7 மாகாணங்களில் வட கரோலினாவை மட்டுமே கைப்பற்றி இருந்தார். இம்முறை மீதமுள்ள 6 மாகாணத்தையும் வென்று மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார். 1996ல் பில் கிளிண்டனுக்குப் பிறகு 2020ல் அரிசோனாவை கைப்பற்றிய முதல் ஜனநாயக வேட்பாளர் என்ற பெருமையை பைடன் பெற்றார். தற்போது அந்த மாகாணத்தையும் மீண்டும் குடியரசு கட்சி பக்கம் திருப்பி இருக்கிறார் டிரம்ப். இதுமட்டுமின்றி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் 52 உறுப்பினர்களுடன் டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சிக்கு 47 எம்பிக்கள் உள்ளனர். கீழமையான பிரதிநிதிகள் அவையில் டிரம்ப் கட்சிக்கு 216 எம்பிக்களும், ஜனநாயக கட்சிக்கு 209 எம்பிக்களும் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பலத்தை பெற 218 எம்பிக்கள் தேவை. விரைவில் அந்த எண்ணிக்கையை குடியரசு கட்சி எட்டும் என்பதால் நாடாளுமன்றத்திலும் டிரம்ப் கட்சி முழு பலத்தை பெற்றுள்ளது. இத்தகைய அசுர பலத்துடன் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.

Tags

Next Story