ஷாட்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97*, ருதர்ஃபோர்ட் 43 ரன்கள் எடுத்தனர்.

லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம்!!

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம். மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவத்தினரின் தகவல் தொடர்புக்கு 4ஜி, 5ஜி சேவை ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். லடாக் மற்றும் கார்கில் மாவட்டங்களில் மட்டும் 4 முக்கிய கோபுரங்கள் உட்பட பல மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சியாச்சினில் கடும் வானிலையில் பணியாற்றும் படையினருக்கு அதிகவேக இணைய சேவை உதவியாக உள்ளது.

தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை!!

தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.16 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 2024க்கு முன் வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு ராயல்டி தொகை கன மீட்டருக்கு ரூ.56ஆக இருந்தது. 2024ம் ஆண்டில் ராயல்டி தொகை ரூ.90ஆக உயர்த்தப்பட்டதற்கு கிரஷர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வெட்டி எடுக்கும் கனிமங்களை டன் அளவில் கணக்கிடாமல் கன மீட்டர் அளவிலேயே கணக்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி!!

ஆலங்குளம் அருகே கோயிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலியானார். பொன்ராஜ் என்பவரின் மகள் தனுமித்ரா தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

தங்கம் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு!!

கடந்த பிப்ரவரி மாதம் 15 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி மார்ச் மாதத்தில் 52 டன்னாக அதிகரித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கம் விலை உயர்ந்த போதிலும் இறக்குமதி உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பாக இனி வழக்குகள் வராத வகையில் செயல்படவேண்டும் என்றும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கியதை எதிர்த்து வடபழனியைச் சேர்ந்த மணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் : நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது, இறுதியானது என்றும் அதிமுக கூட்டணி பற்றி பாஜக நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!!

ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோனேரிப்பள்ளியில் டிப்பர் லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பேச வேண்டாம்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜகவிலும் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். கூட்டணி குறித்து ஏற்கனவே அமித் ஷா பேசிவிட்டார் என்பதால் யாரும் அதுபற்றி பேசக் கூடாது என்றும் தேர்தல் கூட்டணி குறித்து அமித் ஷா – பாஜக தலைமை முடிவு எடுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!!

வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 ஐ எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்ததற்கும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கவும், வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்.

கட்சி தலைமையின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம்: அதிமுக

கட்சி தலைமையின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக உத்தரவு அளித்துள்ளது. கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என தம்பிதுரை பேசியது சர்ச்சையான நிலையில் உத்தரவு அளித்துள்ளது.

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்பாதை ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!!

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்பாதை ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்தவர் இளமாறன் என்பவரிடம் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க மின்பாதை அலுவலர் முனுசாமி ரூபாய் 1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

த.வெ.க. கொடியில் யானை படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதில் தர உத்தரவு!!

த.வெ.க. கொடியில் யானை படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதில் தர உத்தரவு அளித்துள்ளது. இது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது’ என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்.29க்குள் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தபுரம் கோயிலில் பட்டியலினத்தவர் வழிபடலாம் : மதுரைகிளை

மதுரை எழுமலை உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலில் பட்டியலினத்தவர் வழிபாடு நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பூட்டப்பட்ட கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், “தற்போதைய பங்குனி திருவிழாவில் பட்டியலினத்தவர் உள்பட இரு தரப்பினரும் வழிபாடு நடத்தலாம்; அரச மரத்தை அனைத்து தரப்பினரும் சுற்றி வந்து வழிபாடு நடத்தலாம்,” என நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும் அரச மரத்தை தொடக் கூடாது, சந்தனம் பூசக் கூடாது, ஆணி அடிக்கக் கூடாது என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம்

வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்த நில வகைப்படுத்துதலும் மேற்கொள்ளக் கூடாது. 5 ரிட் மனுக்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். வக்பு சொத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளை செயல்படுத்த கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1800 திருமணங்கள் நடந்துள்ளன: அமைச்சர் சேகர்பாபு!

சமய அறநிலையத்துறை மூலம் 1800 திருமணங்கள் நடந்துள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2820 குடமுழுக்குகள் நடந்துள்ளன; அதில் 820 அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம்!!

வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 1129 புள்ளிகள் உயர்வு!!

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை நண்பகலில் திடீர் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 1129 புள்ளிகள் உயர்ந்து 78173 புள்ளிகளில் வர்த்தகம். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம்.