லஞ்ச வழக்கில் வேலூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனருக்கு 3 ஆண்டு சிறை

லஞ்ச வழக்கில் வேலூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனருக்கு 3 ஆண்டு சிறை

குமார்

வேலூர் மாநகராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்காக ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி ஆணையராக 2017-ம் ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார் (வயது 60). வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்த எடுத்து பணி செய்துள்ளார். இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.

அதற்கு பாலாஜி ரூ.20 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தண்டனை பெற்ற முன்னாள் ஆணையர் குமார் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story