சேலம் மண்டல முடிதிருத்தும், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் கூட்டம்

சேலத்தில் நடந்த கூட்டம்

Update: 2024-12-28 03:58 GMT
சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் நேற்று சேலம் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அழகு கலை பயிற்சி வல்லுனர்களால் இலவச அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்துவது, மிகக்குறைந்த கட்டண விவரங்கள் அடங்கிய விளம்பர பலகைகளை வைத்து மற்ற முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கார்பரேட் சலூன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் சரியான கட்டணங்களை நடைமுறைப்படுத்த அறிவுறுத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்து முடிதிருத்தும் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல், மனுக்களை இலவசமாக வழங்கும் பணியில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்களையும் சங்கத்தில் இணைத்து பயன்பெற செய்தல், நல வாரிய உதவிகள், பதிவுகள் புதுப்பித்தல் ஆகியவற்றை பரிந்துரைக்கும் அதிகாரத்தை மண்டல செயலாளர் மூா்த்திக்கு வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Similar News