சிறுமுகை: வனவிலங்குகள் பிரச்சனை - விவசாயி வேதனை !

மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சிறுமுகையை சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறார்.

Update: 2024-12-28 04:10 GMT
கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைசாமி, தனது விளை நிலத்தில் மயில்களால் ஏற்படும் தொல்லை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் முகத்துடன் முறையிட்டுள்ளார்.தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சாம்பார் வெள்ளரி பயிரிட்டுள்ள துரைசாமி, மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார். இரவும் பகலும் கண்காணித்தும் மயில்களை விரட்ட முடியவில்லை,வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம். இப்படி போனால் மனிதர்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என துரைசாமி நேற்று வலியுறுத்தியுள்ளார். தனது வேண்டுகோளை வலியுறுத்தும் வகையில், கழுத்தில் சாம்பார் வெள்ளரியை தொங்கவித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த துரைசாமி, வனவிலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றிற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்வை முன்வைத்துள்ளார்.வனவிலங்குகள் அதிகரித்து விட்டால் மனிதனை அழித்துவிடும். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.

Similar News