நட்சத்திர ஹோட்டல்களில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள்

நட்சத்திர ஹோட்டல்களில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள்

Update: 2024-12-28 05:31 GMT
ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 31-ந்தேதி நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசாட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. விருந்தினர்களை மகிழ்ச்சி படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுகள், பழங்களில் தயாரித்த பிரத்தியேக ஒயின் வகைகள், மது மற்றும் உழர் பழத்திலான கேக் வகைகள், விளையாட்டு போட்டிகள், டிஜே உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்து உள்ளன. இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆரம்பமாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை போட்டி போட்டு இளைஞர்களும், இளம் பெண்களும் முன்பதிவு செய்து வருகிறார்கள்.இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்ட விதிமுறைகள்படி அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும், ஏற்பாடுகள் குறித்து பகுதி போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும், நள்ளிரவு 12:30க்குள் நிகழ்ச்சிகளை முடித்து விட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் என 6 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்கானிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் ஓட்டல்களில் மது விருந்து நடைமுறைகள் குறித்து நேற்று மாமல்லபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்களபிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அப்போது பார் லைசென்சு வைத்திருப்போர் தடை செய்யப்பட்ட வெளி மாநில, வெளிநாட்டு மது வகைகளை பரிமாற கூடாது, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கக்கூடாது. அப்படி எவரேனும் பயன்படுத்தி வந்தால் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக போலீசுக்கு தகவல் தர வேண்டும். பார் அனுமதி இல்லாத உணவகங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தால் சீல் வைக்கப்படும். அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கி உள்ளன.

Similar News