காவேரிப்பாக்கத்தில் சைக்கிளில் சென்றவர் விபத்தில் பலி!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலிதொழிலாளி பலி
காவேரிப்பாக்கம் அடுத்த கீழ்வீராணம்,சூரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கிபடித்து வருகின்றனர். ரமேஷ் கடந்த சில ஆண்டுகளாக காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரியில் உள்ள தனது மாமியார் வீட்டி லேயே மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வேலைகளை முடித்து விட்டு ஓச்சேரியில் இருந்து ரமேஷ் சைக்கிளில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சிறுகரும்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ரமேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் கீழே கிடந்தார். அவர் மீது அடுத்தடுத்த வாகனங்கள் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தவழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத் துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.