மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக எம்எல்ஏ கடிதம்
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு திருமங்கலம் எம்எல்ஏ கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ உதயகுமார் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி. பேரையூர் பகுதியில் தொடர் மழை பெய்தும் இப்பகுதி கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததே கண்மாய்களில் நீர் தேக்கவைக்க முடியவில்லை. தொடர்ந்து கோரிக்கை வைத்தும் ஊர்களையொட்டி அமைந்துள்ள கண்மாய்கள் தூர்வாராததால் குப்பை தொட்டியாகவும், கழிவுநீர்தேங்கும் மையமாகவும் மாறியுள்ளது. வரத்துக்கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் குறுகிவிட்ட காரணத்தினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல், காய்கறிகள், மக்காச்சோளம் ஆகியவைகைள் பயிரிட்டாலும், கண்மாய் தண்ணீர் இருந்தால்தான் பயிரிடப்பட்ட நிலங்களில் முழுமையாக மகசூல் பெற முடியும். ஆகவே விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதியில் மழைநீரை கண்மாய்களில் தேவையான அளவு தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்த வடகிழக்கு பருவமழையில் கிடைகின்ற மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க இப்பகுதியில் உள்ள கண்மாய்களை உடனடியாக தூர்வாரிடவும், தண்ணீர் தேக்கிவைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.