சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாற்றில் தொழிலாளி பிணம்

போலீசார் விசாரணை

Update: 2024-12-28 08:13 GMT
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டறை மாரியம்மன் கோவில் பின்புறம் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் செல்கிறது. நேற்று மதியம் 2.30 மணியளவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் பிணம் மிதப்பதாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று திருமணிமுத்தாற்றில் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், இறந்தவர் ஜாரி கொண்டலாம்பட்டி ரங்காபுரம் மேளக்கார தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது 64) என்பது தெரியவந்தது. அவர் எப்படி தண்ணீரில் விழுந்து இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கூலி வேலை செய்து வந்த அவர், திருமணிமுத்தாறு ஓரமாக உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அப்போது, கால் தவறி திருமணிமுத்தாற்றில் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News