ஜல்லிக்கட்டு போட்டி: கார், டிராக்டர் பரிசாக அறிவிப்பு.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான நாளை (ஜன.14)பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்களை மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்தியாயினி தலைமையில் மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, விஏஓ சிவராமன் உள்ளிட்ட அதிகாரிகள் அவனியாபுரம் அருகே உள்ள பி எம் எஸ் பள்ளியில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காளைகளுக்கு பரிசு பொருட்களை சேகரித்து வருகின்றனர். இதுவரை 100 சில்வர் குடம்,20 ரேஞ்சர் சைக்கிள், 20 இண்டக்க்ஷன் ஸ்டவ், மெத்தை 20 , டேபிள் பேன் 75, மிக்ஸி 20, அயன் பாக்ஸ் 25 , பிரஷர் குக்கர் 25 , வெள்ளி காயின் 40 , பீரோ ஐந்து மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான முதல் பரிசாக கார் சிறந்த காளைகளுக்கான முதல் பரிசு டிராக்டர் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பில் பி எம் எஸ் பள்ளியில் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அதிக காளைகளை பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படவுள்ளது.மேலும் களத்தில் நின்று வீரர்களை தெறிக்கவிடும் காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.