அதிராம்பட்டினத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடிய அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி ;
தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்களின் சேர்க்கை குறைந்து, பள்ளிகள் தடுமாறி வரும் வேளையில், அதிராம்பட்டினத்தில் அரசுப்பள்ளிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் 1ம் நம்பர் தொடக்கப்பள்ளி 1920 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்பு நடுநிலைப் பள்ளியாகவும் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் மட்டும் 285 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், 100 ஆம் ஆண்டு துவக்க விழா அதிராம்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் இராம.குணசேகரன் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன், அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் மதன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் இன்பநாதன், பாலமுருகன், அனுசியா மாரிமுத்து, கிருத்திகா ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக சின்னத்திரை இயக்குனர் பட்டிமன்ற நடுவர் அண்ணா. சிங்காரவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அப்துல் கரீம், நகர்மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துராமன், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.