பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி நேற்று சேலம் கோரிமேடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மயில்வேலன் தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் சிங்காரவேலு, மாவட்ட செயலாளர் கோவிந்தன் உள்பட ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் நீண்ட காலம் கிடப்பில் உள்ள ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட விண்ணப்ப மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் சேவை குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.