
அரக்கோணம் அடுத்த செய்யூர் பகுதியை சார்ந்தவர் தீபத் ராஜ் (வயது 20). இவர் கடந்த 28-ந் தேதி இரவு 8 மணிக்கு சென்னை பட்டரவாக்கத்திற்கு வேலைக்கு செல்வதற்காக மோசூர் ரயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் தனது மாமாவுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி தீபத்ராஜ் செல்போனை பறித்துச்சென்றதாக கூறி அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர். இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் மோசூர் ரயில் நிலையத்தில் ரோந்து பணியின் போது பிளாட்பாரத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மோசூர் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற முருகன் (23) என்பதும் செல் போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பொன்மணி என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.