மஹிந்திரா காரை இப்படி கூட மாற்றலாமா?
மஹிந்திரா கார்
மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்திற்கு என்றே நம் நாட்டில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மாருதி சுஸுகியின் ஜிம்னி போன்ற வாகனங்கள் விற்பனையில் இருப்பினும், தார் வாகனத்தின் ஆதிக்கத்தை தடுக்க முடியவில்லை. தார் வாகனத்திற்கு இந்திய மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதற்கு காரணங்களுள் ஒன்று இந்த மஹிந்திரா வாகனத்தை விருப்பப்பட்டால் உரிமையாளர்கள் எளிதாக மாற்றி கொள்ளலாம் என்பதாகும்.
இந்த வரிசையில், இங்கு ஒரு மஹிந்திரா தார் வாகனம் அளவில் பெரியதான 37 இன்ச் டயர்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. 37 இன்ச்சில் டயர்கள் என்பது மிக பெரியது ஆகும். இதனால், இந்த குறிப்பிட்ட தார் வாகனம் பார்ப்பதற்கு மான்ஸ்டர் வாகனம் போன்று காட்சியளிக்கிறது. இந்த தார் வாகனத்தின் ஓனர் கூறுகையில், இந்த வாகனத்தில் ரேடார் ரெனேகேட் ஆர்டி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த டயர்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்றவை என்றும், கரடு முரடான சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் சரியானவை என்று தெரிவித்துள்ளார். 17-இன்ச் இரும்பு சக்கரங்களில் இந்த 37-இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் டயர்களை மாற்றினால், அதற்கேற்ப வாகனத்தின் சஸ்பென்ஷன் செட்-அப்பையும் மாற்ற வேண்டும். அந்த வகையில், இந்த தார் வாகனத்தின் சஸ்பென்ஷனையும் அப்கிரேட் செய்துள்ளனர். இதற்காக வாகனத்தை கொஞ்சம் மேலே தூக்கும் லிஃப்ட் கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த லிஃப்ட் கிட்டை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த லிஃப்ட் கிட் ஆனது ஜீப் வ்ராங்க்லர் வாகனத்தில் பயன்படுத்தப்படுவதாகும்.
இதன் காரணமாக, இந்த தார் வாகனம் நிற்கும் விதமே மொத்தமாக மாறியுள்ளது. அதேபோல், இந்த தார் வாகனத்தின் சேசிஸையும் வலுப்படுத்தி உள்ளதாக கூறும் உரிமையாளர், எலக்ட்ரிக் வின்ச்சையும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எலக்ட்ரிக் வின்ச்சின் மூலமாக அதிகப்பட்சமாக 15 டன்கள் வரையிலான எடை கொண்ட சுமைகளை இழுத்து செல்லலாமாம். இந்த தார் வாகனத்தின் முன்பக்கத்தில் கிரில் மற்றும் ஹெட்லைட்களை மாற்றியுள்ளனர். இவற்றுடன் வாகனத்தின் பின் சக்கரத்தில் பிரேக்கையும் மாற்றியுள்ளனர்.
சிறந்த செயல்படுதிறனுக்காக வாகனத்தின் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, வாகனத்தின் என்ஜினையும் சற்று ட்யூன் செய்துள்ளனர். இதன் மூலமாக, என்ஜின் கூடுதலாக 20 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது. இந்தியாவில் மஹிந்திரா தார் வாகனத்தில் பெட்ரோல், டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 130 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலும், 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன. இதில் டீசல் என்ஜின் மட்டுமே 4x4 டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது.