இந்த வழிமுறைகளை கவனமாக பின்பற்றினால் உங்கள் வாகனம் பாதுகாப்பாக இருக்கும் !!!
ஆட்டோ மொபைல்
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வெள்ளம் வரவும் வாய்ப்பு உள்ளது.
பெரிய நகரங்களில், குறிப்பாக அடித்தள பார்க்கிங் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், கார்கள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும். பல கார் உரிமையாளர்கள் வெள்ளத்தில் சிக்கிய காரை இனி பயன்படுத்த முடியாது என கவலை படுகிறார்கள். இந்த வழிமுறைகளை கவனமாக பின்பற்றினால் உங்கள் வாகனம் பாதுகாப்பாக இருக்கும்.
கார் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, என்ஜினை ஆன் செய்யக்கூடாது. என்ஜினை ஆன் செய்யும்போது என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால், அது முற்றிலும் சேதமடையலாம். அதற்கு பதிலாக, காரின் கதவுகளைத் திறக்கவும், இதனால் காரில் உள்ள அதிகபடியான தண்ணீர் வெளியேறும். மேலும், அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து காரை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். லைட்கள், ரேடியோ, பவர் விண்டோஸ்கள் போன்ற எலக்ட்ரிகல் சுவிட்ச்சை ஆன் செய்யக்கூடாது.
வாகனத்தை சேவை மையம் அல்லது பயிற்சி பெற்ற மெக்கானிக்கிடம் கொண்டு செல்லுங்கள், இதனால் வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடியும்.
காரில் தண்ணீர் புகுந்தால், காரின் பேட்டரியை உடனடியாக வெளியே எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் காரின் மின் பாகங்களில் தண்ணீர் நுழையாது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால் எலெக்ட்ரிக்கல் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உங்கள் காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்தால் என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட்டுடன் கலக்கிறது. இதன் காரணமாக, என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட் இரண்டும் கெட்டுவிடும். எனவே, காரைத் தொடங்குவதற்கு முன், என்ஜின் எண்ணெய் மற்றும் கூலன்ட்டை மாற்றவும்.
அனைத்து திரவங்களும் மாற்றப்பட்டவுடன், அடுத்த கட்டமாக ஃபியூயல் டேங்க்கை காலி செய்ய வேண்டும், ஏனெனில் தண்ணீர் உள்ளே நுழைந்திருக்கலாம். ஃபியூயல் டேங்க்கில் தண்ணீர் இருந்தால் அது, சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்டர் அல்லது கார்பூரேட்டர் மற்றும் பிற பாகங்களில் சிக்கலை ஏற்படுத்தும்.