துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் 12 வது வர்த்தகர் சந்திப்பு

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் 12 வது வர்த்தகர் சந்திப்பு - பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது – ஓவிய கண்காட்சி நடந்தது

துபாய் நகரின் லேவெண்டர் ஓட்டலில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் 12 வது வர்த்தகர் சந்திப்பு 21.09.2024 மாலை நடந்தது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக மாணவி சுஜிதபிரியாவின் ஓவிய கண்காட்சியும் நடந்தது.

அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அமீரகத்தில் இந்திய வர்த்தகர்கள் தங்களது வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முக்கிய பணியை இந்த கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் சென்னையில் நடந்த வர்த்தக மாநாட்டில் அமீரக வர்த்தகர்கள் பலர் பங்கேற்றனர் என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உம் அல் குவைன் அமீரக பிரமுகர் ஷேக் அலி பின் அப்துல்லா அல் முல்லா, அப்பொல்லோ மெட்ஸ்கில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் புலிஜல்லா, அமீரகத்துக்கான ஜிம்பாப்வே நாட்டின் துணை தூதர் நெவர் முடிஸ்வா, துபாய் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அலி ஹுசைன் அல் ஹம்மாதி, அமீரக தொழிலதிபர் அஹமது அல் ஹபசி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மருத்துவத்துறையில் சிறப்பான சேவைகளை செய்து வரும் வீகேர் மருத்துவ நிலையத்தின் அலுவலக மேலாளர் மணிகண்டனுக்கு வழிகாட்டி விருதும், மருத்துவத்துறையில் சிறப்பிடம் பெற்ற டாக்டர் ஸ்ருதி ரமேஷுக்கு டீபா வர்த்தக விருதும், ஓவியத்துறையில் சிறப்பிடம் பெற்றுள்ள சுஜிதபிரியா மற்றும் விளையாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்றுள்ள திருவிதாங்கோடு மாஹிரா மகாபீர் ஆகியோருக்கு இளம் சாதனையாளர்களுக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வர்த்தக பொருட்கள் அறிமுகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது.

அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம்-ன் ஓவியத்தை விழாவில் நேரடியாக மாணவி வரைந்தார். மேலும் அவரது ஓவிய கண்காட்சியும் நடந்தது. இதனை உம் அல் குவைன் அமீரக பிரமுகர் பார்வையிட்டு பாராட்டினார். இந்த விழாவில் 200 க்கும் மேற்பட்ட தமிழக வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags

Next Story