ஓமன் நாட்டின் துகும் பகுதியில் 22வது புதிய பள்ளிக்கூடத்தை இந்திய தூதர் திறந்து வைத்தார்
ஓமன் நாட்டின் துகும் பகுதியில் 22வது புதிய இந்திய பள்ளிக்கூடத்தை இந்திய தூதர் அமித் நாரங் திறந்து வைத்தார்.
துகும் பகுதியில் வசித்து வரும் இந்திய சமூகத்தினர் தங்களது பிள்ளைகள் பயனடையும் வகையில் இந்திய பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தி வர வேண்டும் இந்திய தூதரகத்துக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து புதிய பள்ளிக்கூடத்தை இந்திய தூதர் அமித் நாரங் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது இந்திய தூதர் அமித் நாரங் பேசியதாவது : துகும் பகுதியில் வசித்து வரும் இந்திய சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பினை இந்த பகுதியில் வசித்து வரும் மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஓமன் பிரமுகர் ஷேக் பதர் பின் நாசர் அல் பார்சி, ஓமன் கல்வித்துறை அமைச்சகத்தின் தனியார் பள்ளிக்கூடங்களுக்கான பொது இயக்குநர் டாக்டர் கதீஜா அலி முகம்மது அல் சலமி, அல் உஸ்தா கவர்னரகத்தின் கல்வித்துறை அதிகாரி மாஜித் பின் நாசர் அல் சினவி, இந்திய தூதரின் மனைவி திவ்யா நாரங், ஓமன் இந்திய பள்ளிக்கூடங்களின் நிர்வாகக்குழு தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமார் மாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
துகும் பகுதியில் புதிய பள்ளிக்கூடத்தை திறப்பதற்கு ஏற்பாடு செய்த இந்திய தூதருக்கு இந்திய சமூகத்தினர் நன்றி தெரிவித்தனர்.