ஓமனில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் காமன்வெல்த் சதுரங்க போட்டியில் சாதனை

ஓமனில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் காமன்வெல்த் சதுரங்க போட்டியில் சாதனை

மலேசியாவில் நடந்த காமன்வெல்த் சதுரங்க போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 'சதுரங்க வல்லுநர்' (Candidate Master) வேலவா ராகவேஷ் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தனித்துவமான திறமை மற்றும் புதிய யுத்திகளை கையாண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதுவரை பல போட்டிகளில் இவர் வெற்றி பெற்றாலும் காமன்வெல்த் சதுரங்க போட்டியில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இவர் விளையாடிய 9 சுற்றுகளில் 7 புள்ளிகளை பெற்று இப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டிகளில் மலேசியாவைச் சேர்ந்த நிரிஷ் குமார் சிவகுமார் தங்கப் பதக்கத்தை வென்றார்.

வேலவா வெள்ளி பதக்கம் வென்ற பின்னர் தன்னுடைய அனுபவத்தை கூறியதாவது : ‘நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் சவாலாக இருந்தது. இருந்தாலும் நான் மனம் துவண்டு போகாமல் போராடி வெற்றி பெற்றேன். நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் நன்றியுடனும் பெருமையுடனும் உணர்கிறேன். இத்தகைய மதிப்புமிக்க மேடையில் பதக்கத்தை பெறுவதற்கு என்னுடைய தொடர்ச்சியான விளையாட்டும், வழக்கமான பயிற்சியம் உதவின. என்னுடைய பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நான் பயிலும் 'இந்தியன் பள்ளி - அல் சீப்' பள்ளி நிர்வாகத்தினருடைய ஆதரவு எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. முக்கியமாக ஓமன் செஸ் கமிட்டிக்கு (OCC) என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றார்.

அல் சீப் இந்தியன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவரான வேலவா, சதுரங்க விளையாட்டு மட்டுமன்றி தனது கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். இவருடைய பெற்றோர்களான ராகவேஷ் தண்டபாணி மற்றும் ராஜ்யலட்சுமி கோபாலகிருஷ்ணன் மற்றும் மூத்த சகோதரர் ஸ்ரீவிஷ்வ பரத் ராகவேஷ் உட்பட அவரது குடும்பத்தினரின் ஆதரவுடன், தன்னுடைய கல்வி பாதிக்காமல் சதுரங்கம் விளையாடி வருகிறார். மேலும் வேலவா, தனது ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அவர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மஸ்கட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றிவரும் அவரது தந்தையின் பங்கும் அவரது தாயாரின் அசைக்க முடியாத ஆதரவும் அவரது சாதனைகளுக்கு முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. இதே ஆண்டு, ஜனவரி மாதத்தில் இவர் சதுரங்க போட்டியில் வல்லுநர் பட்டத்தையும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற உலக அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

பள்ளிக் கல்வியை முடிப்பதற்குள், தனது தரவரிசைப் புள்ளிகளை அதிகரிக்கவும், சதுரங்க வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்காகவும் வரவிருக்கும் போட்டிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் வேலவா உறுதியாக இருக்கிறார். எல்லாம் வல்ல இறைவன் ஆசியுடனும், பெற்றோர், குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் சதுரங்க சமூகத்தின் ஆதரவுடன், வேலவா ராகவேஷ் சதுரங்க அரங்கில் உலக அளவில் ஒரு சிறந்த நபராக மாறுவதற்கான நாட்கள் தொலைவில் இல்லை.

Tags

Read MoreRead Less
Next Story