இலங்கையில் அமீரக ஊடகவியலாளருக்கு வரவேற்பு
இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் ஹாசிம் உமர் ஃபவுண்டேஷன் சார்பில் அமீரக ஊடவியலாளர் முதுவை ஹிதாயத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஹாசிம் உமர் ஃபவுண்டேஷன்நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் தலைமை வகித்து பேசும்போது, ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதுவை ஹிதாயத்தை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கொழும்பு நகரில் மீண்டும் சந்தித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கைக்கு வந்துள்ள அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய முதுவை ஹிதாயத் தனது உரையில் எனக்கு வரவேற்பு அளித்த ஹாசிம் உமர் ஃபவுண்டேஷன்நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து ஆறு மாதக் குழந்தையாக இலங்கைக்கு இடம் பெயர்ந்தாலும், புரவலர் ஹாசிம் உமர் ‘உழைப்பே உயர்வு தரும்’ என்பதற்கு ஏற்ப மிகப்பெரிய தொழில் அதிபராகியிருப்பது சிறப்புக்குரியது. மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது, கலை, இலக்கியப் பணிகளுக்கு உதவியாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது சிறப்புக்குரியது. குறிப்பாக முதல் பிரதி வாங்குதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்வது பாராட்டுக்குரியது .
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபல ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’, உடன்குடி கவின்முகில் முஹம்மது யூசுப் எழுதிய ‘சீறாப்புராணம் – ஒளிரும் உவமையும் உண்மையும்’ உள்ளிட்ட நூல்கள் புரவலர் ஹாசிம் உமருக்கு முதுவை ஹிதாயத் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் இலங்கை தினகரன் நாளிதழின் ஆசிரியர் செந்தில்வேலர்,பிரபல தொலைக்காட்சி நிலைய ஆசிரியர் சித்தீக்,கொழும்பு சவுதி அரேபிய தூதரக அதிகாரி அப்துல் அஜீஸ், ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பு மாணவர் அஹில் முஹம்மத் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.