அமீரகத்தின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள உதவும் அபுதாபி ஷேக் ஜாயித் திருவிழா

அபுதாபி : அமீரகத்தின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள உதவும் வகையில் அபுதாபி ஷேக் ஜாயித் திருவிழா இருந்து வருகிறது.

அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

112 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழா வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதியுடன் நிறைவடையும்.

அதிபர்

இந்த திருவிழா அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆதரவுடனும், அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி அலுவலக மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலின் படியும் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களை கவர்ந்து வரும் இந்த திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த திருவிழாவையொட்டி நடக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்ச்சிப் படுத்துவர்.

இதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

ஆளில்லா விமான கண்காட்சி, வண்ணமிகு வாண வேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியம்

அமீரகத்தின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள உதவும் வகையில் மண்பாண்டங்கள் செய்வது, கைவினைப் பொருட்கள் செய்வது உள்ளிட்டவை இங்குள்ள பாரம்பரிய கிராமத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பொருட்களை இந்த திருவிழாவை பார்வையிட வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த பணியில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. பொதுமக்கள் பலர் அவர்கள் மேற்கொள்ளும் பாரம்பரிய பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்த பாரம்பரிய பொருட்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

இந்த பாரம்பரிய பொருட்களை செய்யும் பணிகளுக்கு கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன.

உணவு

இந்த திருவிழாவை பார்வையிட வரும் பொதுமக்கள் உணவுப் பொருட்களை சாப்பிடும் வகையில் 60 உணவகங்கள் இங்கு உள்ளன. இதில் அரபி, இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் சாப்பிட்டு ருசிக்க முடியும்.

பஸ் வசதி

தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த திருவிழாவை காண திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story