துபாயில் கர்நாடக இசை நிகழ்ச்சி
தில்லான மோஹனாம்பாள் திரைப்பட புகழ் கொத்தமங்கலம் சுப்பு குடும்பத்தை சேர்ந்த ராதிகா ஆனந்த் டீம் மோஹனா குழுவினர் துபாயில் பல வருடங்களாக கர்னாடக இசைக் கவிஞர்களின் பாடல்களை தேர்ந்தெடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை பயிற்றுவித்து அவர்களை ஒரே நேரத்தில் மேடையேற்றி சேர்ந்திசையாக இசை விருந்து படைத்து வருகின்றனர்.
அமீரகத்தில் இசை பாரம்பரியத்தை தொடரும் மிகப்பெரும் பணியை 2009 வருடம் முதல் செய்து வரும் இக்குழுவினர், கடந்த வருடங்களில் 2015 முதல், பாபநாசம் சிவன், முத்துசுவாமி தீக்ஷிதர், புரந்தரதாசர், சுவாதி திருநாள், மஹாகவி பாரதியார் என பல இசை மேதைகளின் பாடல் கோர்வைகளை அமீரக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பெருமுயற்சியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
இவ்வருடம் அன்னமாச்சார்யாரின் கீர்த்தனைகளை, 58 வருட கால இசை அனுபவம் வாய்ந்த, ‘கன்யாகுமாரி அம்மா’என அன்புடன் அழைக்கப்படும் இசை உலக ஜாம்பவான் பயிற்றுவிக்க, ஏறத்தாழ 365 கர்நாடக இசை மாணவ மாணவியர் ஆசிரியர்கள் பங்கு கொண்டு மேடையும் அரங்கமும் ஒருங்கே நிறைந்து, அமீரகம் காணாத அற்புத நிகழ்வாக அரங்கேறியது. சங்கீத கலாநிதி விதூஷி கன்யாகுமாரி 6 மாத அயராத மேற்பார்வையில், பாவனி ஸ்ரீகாந்த், ஸ்ரீ காந்த் மற்றும் துபாய் இசை ஆசிரியை விசாலாக்ஷி பயிற்சியில், 45 இசை ஆசிரியைகள் தங்களது மாணவர்களுக்கு முறையே கற்றுத்தர, அன்னமாச்சார்யாரின் 10 கீர்த்தனைகளை , அனைத்து கலைஞர்களும் கடந்த மே 25 அன்று, வண்ண உடைகளில், நேர்த்தியான அலங்காரத்தில், பார்வையாளர்கள் புரவலர்கள் அனைவரையும் கவரும் வண்ணம், அரங்கம் அதிரும் கைதட்டல்களுடன் வழங்கி சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து 10 வயலின் கலைஞர்கள் பங்கு கொண்ட புதுமையான வாத்திய கச்சேரியும் நடைபெற்றது. கன்யாகுமரி அம்மா இசையமைத்த சிந்து பைரவி தில்லானா மற்றும் சாருகேசி ராகத்தில் மேற்கத்திய கோர்வையாக ‘மெல்டிங் ஆரா’ எனும் இசைக்கோர்வை முதலான பல பாடல்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் டீம் மோஹனா குழுவின் மாணவ மாணவியர் பங்கு பெற்ற கன்யா அம்மா இசையின் சப்தாத்ரி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும், இசைக்கலைஞர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
கன்யா அம்மாவுக்கு அமீரக கர்நாடக இசை ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து வழங்கிய பண முடிப்பு பொற்கிழியும் ‘தந்த்ரி வாத்ய விஷாரதா’எனும் பட்டமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இசை வல்லுனரான சங்கீத கலாநிதி ராகவாச்சாரி மற்றும் பிரபல வயலின் கலைஞர் கலைமாமணி எம்பார் கண்ணன் முன்னிலையில் அளித்து கௌரவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆனந்த் மற்றும் தீபா வினய் இருவரும் அடுத்து சென்னையில் ஜுலை 7,2024 அன்று நடக்க இருக்கும் குரு வந்தனம் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டனர்.
பக்க வாத்ய கலைஞர்களான மிருதங்கம் நந்தகோபால் மற்றும் கிருஷ்ணகுமார், வயலின் கௌஷிக், வீணை வித்யா, மோர்சிங்க் கொன்னகோல் அம்ருத், ஹார்மோனியம் சாய் ஸ்ரீவத்ஸ் என அனைவரின் பங்களிப்பையும், புரவலர்களின் பங்களிப்பு, டீம் மோஹனாவின் குழு உறுப்பினர்களான ராதா ஷங்கர், நித்யா ரங்கராஜன், அனுஷா ரமேஷ், ஷீலாரங்கா மற்றும் வித்யா மஹேஷ் இவர்களையும் பாராட்டி, டீம் மோஹனா குழுவின் இயக்குனரான ராதிகா ஆனந்த் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.