துபாயில் சாலையில் கிடந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்த தோப்புத்துறை இளைஞர்
துபாய் நகரின் முக்கிய சாலை ஒன்றில் நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்த யூ. நஜீபுதீன் யூசுப்ஷா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பணப்பை இருப்பதை பார்த்தார். இதனையடுத்து
அவர் அதனை எடுத்து பார்த்த போது அதில் 34,800 திர்ஹாம் பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக அந்த பணத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த பணத்தின் இந்திய மதிப்பு சுமார் எட்டு இலட்சம் ரூபாய் ஆகும். இந்த பணத்தை ஒப்படைத்ததும் போலீஸ் அதிகாரிகள் தமிழக இளைஞரின் நேர்மையான செயலை ஊக்கப்படுத்தி நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
இது குறித்து யூ. நஜீபுதீன் யூசுப்ஷா கூறியதாவது, சாலையில் நடந்து சென்ற போது பணம் கிடந்தது. எனினும் அந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்தேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். என்னுடைய இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தந்த போதனைகளின் அடிப்படையில் இந்த செயலை செய்தேன். இதன் மூலம் அந்த பணமானது உரியவருக்கு சென்று சேர உதவியாக இருக்கும். நேர்மையாகவும், பிறரது பணத்துக்கும், பொருளுக்கும் ஆசைப்படாமல் செயல்பட்டால் இறைவனது உதவி நமக்கு வந்து சேரும் என்றார்.
மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்ட தமிழக இளைஞருக்கு அவரது ஊரைச் சேர்ந்த அமீரக வாழ் மக்கள் மற்றும் தோப்புத்துறை துபாய் சங்கம் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.