ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த போட்டி!
ஷார்ஜா கோரல் பீச் ரெசார்ட் நிர்வாகம் மற்றும் கிரீன் குளோப் அமைப்பு ஆகியவை இணைந்து உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ‘Recycled Materials Comepition' அதாவது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கான போட்டி கடந்த 09/06/2024 ஞாயிற்றுக் கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடக்கமாக பார்வையற்ற தமிழக மாணவர் ஈசா அப்துல் ஹாதி இறைவசனங்களை ஓதினார். மறுசுழற்சி முறையை கையாளுவதன் மூலமாக நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் குப்பைக் கழிவுகளைக் குறைக்கவும் வலியுறுத்தி மாணவர்களுக்கு மத்தியில் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கிஃப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை ஓட்டல் அதிகாரி இஃப்திகார் வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கிரீன் குளோப் அமைப்பின் தலைவி மதுரை ஜாஸ்மின் அபுபக்கர், அல்மாஸ் உள்ளிட்ட குழுவினர் சிறப்பிடம் செய்திருந்தனர். நிகழ்ச்சியை ஹாரித் முகம்மது, ஹமத் ஆமிர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் கூத்தாநல்லூர் தாஹிர், தேவிபட்டிணம் நிஜாம், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கடலூர் திருநாவுக்கரசு, கடற்கரை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டல் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். குறிப்பாக ஓட்டல் நிர்வாகிகளுக்கு தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டு கண்ணாடி பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.