கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தை உள்ளிட்ட 15 பேர் மீட்பு
நாமக்கல் அடுத்த பெருமாபட்டி ஊராட்சி கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகரன், அவரது மகன் பரணி ஆகியோருக்கு சொந்தமான எஸ்.எஸ்.பி., கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இக்கோழிப்பண்ணையில் சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒரிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த 15 க்கும் மேற்பட்டோர் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் தங்களை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தங்களையும், தங்களது குழந்தைகளையும், கொத்தடிமையாக வைத்துள்ளதாக சத்தீஸ்கர் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உறவினர்கள் சத்தீஸ்கர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் படி, நாமக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தனர். ஆட்சியா் உத்தரவின் பேரில் சத்தீஸ்கரில் இருந்து வந்த காவல் துறையினருடன் நாமக்கல், ஆர்.டி.ஓ., சுரேந்தர் தலைமையில் சேந்தமங்கலம் தாசில்தார் பாஸ்கர் மற்றும் நாமக்கல் காவல் மற்றும் தொழிலாளர் நலத் துறையினருடன் நேரில் சென்று கெஜல்நாயக்கன் பட்டியில் உள்ள எஸ்.எஸ்.பி., கோழிப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கொத்தடிமைகளாக தங்கிருந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 15 பேரை மீட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.