அணைகளில் இருந்து ஆற்றில் கலந்து வீணாகும் 5300 கன அடி தண்ணீர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செய்யாறு பாய்ந்து ஓடுகிறது. இதில் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலத்தில் ஒரு தடுப்பணையும், மாகரல் பகுதியில் செய்யாற்று மேம்பாலத்தின் அருகே ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது மிக்ஜம் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 149 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.மேற்கூறிய இரண்டு அணைக்கட்டில் இருந்து தற்போது 5351 கன அடி நீர் ஆற்றில் வீணாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே அனுமந்தண்டலம் அணைக்கட்டு பகுதியில் இருந்து உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ஐந்து ஏரிகளுக்கு நீர் செல்ல ஏற்பாடு செய்த பொது பணித்துறை மாகரல் அணைக்கட்டில் இருந்து செல்லும் வீணான நீரை அருகில் உள்ள காவாதண்டலம் ஏரிக்கு கொண்டு செல்ல முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதால் அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் மழை நீரை பொறுத்து உள்ளது.
இதுபோன்று நீர் வீணாவதை தடுக்க ஆற்றில் செல்லும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல வரும் காலங்களில் பொதுப்பணித்துறை முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏரி தூர்வார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எந்தவித பயனும் இன்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.