தர்மபுரி : நடுத்தெருவில் பரிதவித்த முதியவருக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்..!

தர்மபுரி அருகே பிள்ளைகளால் கைவிடப்பட்டு உடலில் காயங்களுடன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி காந்தி நகர் பகுதியில் பெருமாள் (வயது85) என்ற முதியவரை நேற்று மாலை உறவினர்கள் ஆட்டோவில் அழைத்து வந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்ததில், அவருக்கு ஆறு பிள்ளைகள் இருப்பதும், அவரது சொந்த ஊர் நூலஅள்ளி கிராமம் என்பதும் தெரியவந்தது.

முதியவர் பெருமாளிடம் இருந்த 3 ஏக்கர் நிலம் மற்றும் நகைகளை பிள்ளைகள் அனைவரும் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டு, அவரை அனாதைபோல், நடுத்தெருவில் இறக்கிவிட்டுச் சென்றதை அறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு உணவளித்து போர்வையும் வழங்கியுள்ளனர். பெரியவர் சிரமப்படுவது குறித்து அவரது உறவினர்களுக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நேற்று காலை வரை அவரை மீட்க எந்த பிள்ளைகளும் முன்வராததால் அப்பகுதி மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வந்த மருத்துவக் குழுவினர், குளிராலும், காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த முதியவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சொத்துக்காக வயதான தந்தையை நடுத்தெருவில் விட்டது குறித்து வருவாய்த்துறையினர் உறவினர்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில், ஆட்சியர் கவனத்திற்கு இந்த சம்பவம் சென்றதால் மீண்டும் முதியவரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

Tags

Next Story