நகராட்சியில் இருந்து மாநகராட்சி: பட்டாசு வெடித்து கொண்டாடிய உறுப்பினர்கள்
நாமக்கல்லை மாநகராட்சியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து நகராட்சி அலுவலகத்தில், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கேக்குகள் வெட்டி, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
1988-ம் ஆண்டு நாமக்கல் தேர்வு நிலை நகராட்சியாக தனது பயணத்தை தொடங்கிய நாமக்கல் நகராட்சி, தற்போது 39 வார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (15.03.2024), நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி ஆணைகள் வெளியிட்டது. இதனையடுத்து நாமக்கல் நகராட்சியில் நகர் மன்றத் தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் கா.சென்னு கிருஷ்ணன், உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்தின் முகப்பு வாயிலில் கேக்குகள் வெட்டி, இனிப்புகளை ஒருவருக்கொருவர் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடித்து அந்த வழியாக வந்த பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பின்கீழ், நாமக்கல் நகராட்சி, அருகில் உள்ள 12 ஊராட்சிகள் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்படும்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், நாமக்கல் நகராட்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதிகள் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.