தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழுவினர் ஆய்வு

தஞ்சை மாநகராட்சியில்  தணிக்கை குழுவினர் ஆய்வு

தணிக்கை குழுதஞ்சாவூர் மாநகராட்சியில் மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளை வாடகைக்கு விட ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், நகராட்சித்துறை நிர்வாக தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

. தஞ்சாவூர் மாநகராட்சியில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையம் வணிக வளாகம் என 91 கடைகளும், சரபோஜி சந்தையில் 302 கடைகளும், காமராஜ் சந்தையில் 288 கடைகளும், திருவள்ளூர் தியேட்டர் வணிக வளாகம், காந்திஜி வணிக வளாகம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டில், மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணக்குமார், மாநகராட்சிக்குப் போதுமான வருமானம் இல்லாததால் ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், ஏற்கனவே இருந்த கடை வாடகையை ரத்து செய்து விட்டு, ஒப்பன் டென்டர் முறையில் கடைகளை ஏலத்திற்கு விட்டார். அப்போது, கடைகளை அதிக ஏலத்தொகைக்கு விடப்பட்டு, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டன.

ஆனால், அந்த கடைகளை ஏலத்திற்கு எடுத்தவர்கள், வாடகை அதிகமாக உள்ளதாக கூறி, ஒராண்டிற்குள்ளாக, கடைகளை திருப்பி ஒப்படைத்தனர். இதனால், மாநகராட்சி நிர்வாகம் கடைக்கான வாடகையை குறைத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதில் தி.மு.க., மேயரான சண்.ராமநாதன் செயல்பாட்டிற்கு, தி.மு.க., மாமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கடைகளை ஏலம் விட்டதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் லெட்சுமி தலைமையிலான தணிக்கை குழுவினர் புதன்கிழமை ஆவணங்களை ஆய்வு செய்தனர். இது குறித்து மாநரகாட்சி அலுவலர்கள் கூறியதாவது; தஞ்சாவூர் மாநகராட்சியின் வருமானத்தை பெருக்கும் நோக்கில், புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொலிவுறு நகரத் திட்டத்தில் கட்டப்பட்ட கடைகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் 1,100 கடைகள் இருப்பதாகவும், ஆயிரம் கடைகளும் வாடகைக்கு விடப்பட்டதாகவும் தெரிந்தது. தொடர்ந்து, ஆய்வுகளில், 751 கடைகளுக்கு மட்டுமே ஏலம் நடத்தி, உரிய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதாக ஆவணங்கள் இருந்துள்ளன. மேலும், கடைகளை ஏலம் எடுத்தவர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை, கடனில்லா மாநகராட்சியாக காட்டுவதற்காக, விதியை மீறி அந்த தொகையை செலவு செய்துள்ளனர். வழக்கமாக ஒருவர் டெபாசிட் செய்த தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அவரால் வாடகையை செலுத்த முடியவில்லை என்றால், அதை வாடகைக்காக தான் பயன்படுத்த முடியும். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் டெபாசிட் தொகை முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காந்திஜி வணிக வளாகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கடைகள் இருந்த நிலையில், அதை இடித்து விட்டு, வெறும் மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே தலா ஆறு லட்சம் ரூபாய்க்கும், குறைந்த டெபாசிட் பெற்றுக் கொண்டு முறையான டென்டர் இல்லாமல் வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது" என தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story