பழைய உணவு விற்பனை - பிரபல பிரியாணி கடை உரிமம் தாற்காலிக ரத்து

பழைய உணவு விற்பனை - பிரபல பிரியாணி கடை உரிமம் தாற்காலிக ரத்து

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு பிரியாணி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 38 கிலோ பழைய சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர், உணவக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹனிஃபா பிரியாணி கடை உள்ளது. இக்கடையில் பழைய சிக்கன், சாதம், எண்ணெய் கத்திரிக்காய், பரோட்டா, சப்பாத்தி மாவு மற்றும் பிரட் ஹல்வா என 38 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு அதன் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவானது தூத்துக்குடி மாநகராட்சியில் எட்டயபுரம் சாலையில் உள்ள அசைவ ஹோட்டலான ஹனிஃபா பிரியாணி என்ற கடையில் இன்று (15.05.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் போது, நேற்று சமைத்து, விற்பனையாகாமல் மீதமாகி, ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அவை மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. மேலும், சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், ரெஸ்டாரண்ட் வகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்திவருவதும் உறுதியானது.

எனவே, “ஹனிஃபா பிரியாணி” என்ற பெயரில் ஃப்ரான்சைஸ் எடுத்து, லிவிங்ஸ்டா என்பவருக்குச் சொந்தமான மேற்படி ஹனிஃபா பிரியாணி என்ற கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய தீர்மானித்து, உத்திரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை அதனை இயக்க இயலாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story