வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளி, காந்தி நகரைச் சேர்ந்தவர் ராதிகா வயது 37. அருகிலுள்ள படத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னாச்சி வயது 50. இவர்கள் இருவரும் டூவீலரில், கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த பக்ருதீன், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மணப்பேட்டையைச் சேர்ந்த அஸ்வந்த், மதுரை மாவட்டம் பொட்டல்களம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன், மேலூரை சேர்ந்த கண்ணன், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து பேரும் டாட்டா சுமோ காரில், டூவீலரில் சென்ற பொன்னாச்சி- ராதிகாவை தொடர்ந்து சென்று விபத்து ஏற்படுத்துவது போல அவர்களை குறுக்கிட்டு, இருவரையும் மறித்து ராதிகா மற்றும் பொன்னாச்சி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் அரவக்குறிச்சி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, ஐந்து குற்றவாளிகளில் பக்ருதீன் மற்றும் அஸ்வின் ஆகிய இருவர் மீதும் தொடர் குற்றச்செயலில் ஈடுபடுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் அளித்த பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு மற்றும் கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் குன்றத்தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.