மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் - கிராம மக்கள் தவிப்பு

சித்தேரி அரசநத்தம், கலசப்பாடி செல்லக்கூடிய மலை பகுதியில் உருவான காட்டாற்று வெள்ளத்தால் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் ஏழு கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தினம்தோறும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரூர் அடுத்த சித்தேரி மலைப்பகுதியான கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய மலைப்பகுதிகளில் இன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் காற்றாற்று வெள்ளம் உருவெடுத்து மலைகளின் இடுக்கில் உள்ள ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

இதனால் வாச்சாத்தி பகுதியின் அடிவாரத்தில் இருந்து, மலைப்பாதை வழியாக செல்லக்கூடிய, அரசநத்தம், கலசப்பாடி, அக்கரைக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு ஆற்றை கடந்து செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் வகையில் கிராம மக்கள் உதவியோடு மீட்கும் பணியில் கிராம மக்களே ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென உருவான இந்த காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த மலைப் பகுதிக்கு தார் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், அதேபோல் இந்த ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் மழைக்காலங்களில் இங்குள்ள மக்கள் இது போன்று சிரமங்களுக்கு உள்ளாகி வருவது வழக்கமாக உள்ளது. எனவே இந்த ஏழு கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் தார்சாலை அமைக்க வேண்டும் அதேபோல் ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என்பது கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story